Thursday, July 28, 2005

தெய்வம் !

நெருப்பு என்றால் வாய் ஒண்ணும் வெந்துபோகாது-ஆனால் எனக்கு நெருப்பு என்று நினைத்தாலே உடம்பு முழுதும் ஒரு பயம் வந்து கவ்வி கொள்ளும். அது ஒரு ஞாயிற்றுகிழமை. நான் 11-ம் வகுப்பு படித்து கொன்டிருந்த நேரம்.DDயில் ஒரு மலையாள அவார்ட் படம் போட்டு 10 நிமிடம் ஆகி இருந்தது. என் தந்தை ஒடி வந்து பதறினார். பின்னாடி தெருவில் (அந்த வீட்டின் சொந்தகாரர் பேர் சொல்லி) வீடு பத்திகிச்சு என்றார்.

எங்கள் தெருவில் ஏறக்குறைய 100 குடிசை வீடுகள் நெருக்கமாய் 3 வரிசைகளில் இருக்கும். எங்கள் வீடு நடுவில் நடு நாயகமாய் இருந்தது. எங்கள் வீட்டின் முன்னேயும் பின்னேயும் முறையே கீற்றினால் வேயபட்ட பந்தலும் கொட்டாயும் இருந்தன.அது ஆடி மாதம் ஆகையால் தீ பயங்கரமாய் பரவ ஆரம்பித்து இருந்தது. தீ ஆரம்பித்தது கடைசி தெருவில். ஓடுகள் வேயபட்ட வீடுகள் சுலபத்தில் பற்றாது என்றாலும் பற்றி கொண்டால் அவ்வளவுதான். மர சட்டங்களில் இருக்கும் ஆணிகள் எரியும் சிறு மர துண்டுகளோடு ராக்கெட்டாய் நாலா திசைகளிலும் பறக்கும். அவை இன்னும் பல வீடுகளில் விழும் அவையும் எரிய ஆரம்பிக்கும்.


எங்கள் வீட்டில் இருந்து எடுக்க நேரமும் இல்லை, தோணவும் இல்லை. அம்மாவையும், தாத்தாவையும் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பியாயிற்று. இரண்டு தெருக்கள் நன்றாய் எரிய ஆரம்பித்து இருந்தன. வெளியேறிய மக்களில் கொஞ்சம் பேர் தெரு முனையில்(மூன்று தெருக்களும் சேரும் இடம்) நின்று அழுது கொண்டு இருக்கின்றனர். மீதி பேர் முடிந்ததை அள்ளி எடுத்து போட்டனர். அப்போது என்னிடம் ஒருவர் சொன்னார்(கத்தினார்), "டேய், உங்க பாட்டி உள்ள மாட்டிகிட்டாங்க பாரு!". அப்போதுதான் எனக்கு பாட்டியின் ஞாபகம் வந்தது.

எங்கள் தெருக்கள் நெருக்கமானதாய் இருக்கும். என் பாட்டி தெருவின் உள்ளே வீட்டின் முன்னே அங்கும் இங்கும் ஓடிகொண்டு இருந்தது புகையின் நடுவே தெரிந்தது. இளங்கன்று பயம் அறியாது என்பதன் அர்த்தம் எனக்கு அன்று புரிந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் தெருவினில் புகுந்தேன். உங்களுக்கே தெரியும் சாதாரண ஒரு குப்பைதொட்டி எரியும் போதே அதன் அருகில் அனல் அடிக்கும். 3 தெருக்கள் எரியும் போது எப்படி இருக்கும் என்பது எழுத்துக்களில் சொல்லி புரியும் விஷயம் அல்ல. நான் உள்ளே போனதன் காரணங்கள் இரன்டு. ஒன்று, பாட்டியை காப்பாற்ற வேண்டுமென்ற வேகம். இன்னொன்று, எனக்கு அனல் அடிக்கும் என்று தெரியாது.


10 அடி தெருவினில் ஓடியிருப்பேன். நெருப்பை விட அனல் காற்று கொடுமையானது. காற்று வேகமாய் வீசி கொண்டு இருந்ததால் ஒரு அனல் அலை என்னை அதே வேகத்தில் வெளியே எறிந்தது. அப்பப்பா! இப்போது நினைத்தாலும் குலை நடுங்கவைக்கும் அனுபவம் அது. என்னை ஒரு கை தூக்கி விட்டது. அவர் கேட்டார் என்ன ஆச்சு? என்று. நான் சொன்னவுடன் அவர் சொன்னார் "திரும்பி உள்ள போகாதீங்க ! நான் பாத்துக்கறேன்" என்று. புகையினூடே அவர் உள்ளே ஓடியதை பார்த்தேன்.

நான் என் தந்தையை பார்த்துவிட்டு திரும்பி ஓடி வந்த போது என் பாட்டியை அவர் கொண்டு வந்து விட்டு இருந்தார். அந்த குழப்பத்தில் அவர் யார் என்று நான் கவனிக்க வில்லை. அவரும் போய்விட்டார். அதன் பிறகு இருந்த பொருள்கள் எல்லாம் திருடு போனது, வீடு இழந்த எல்லாரும் 1 மாதம் பக்கத்தில் இருந்த பள்ளியில் தங்கி இருந்தது, என் பாட்டிக்கு குணமாக 1 மாதம் ஆனது எல்லாம் தனி கதை.

இது எல்லாம் முடிந்து 2 மாதங்கள் இருக்கும். கட்டில் போட்டு வெளியே படுத்து இருந்தேன். ஒருவர் வந்தார். அவர் தான். என் பாட்டியை காப்பாற்றியவர் தான். தாமாகவே அறிமுக படுத்தி கொண்டார். என் பாட்டியை காப்பாற்றிய விஷயத்தையும் சொன்னார். அவருக்கு குணமாக ஒரு மாதத்திற்க்கும் மேலாக ஆனதாக சொன்னார். மெல்லிய வேஷ்டி கட்டி இருந்தார். அவரின் தழும்புகளை காட்டினார். என் பாட்டியின் காயங்களை விட அவை மோசமானதாக இருந்தன. காரணம் ஓடி வரும் போது அனல் காற்று முழுதும் இவர் மீது வீசி இருந்தது.

"சரி பாஸ்! பார்க்கலாம்" என்று தட்டி கொடுத்து விட்டு போனார். அவருக்கு ஏதாவது தேவையா என்று நான் யோசிப்பதற்குள் அவர் போயிருந்தார்.அதற்கப்புறம் என்ன தேடியும் அவரை பிடிக்க முடியாமல் போயிற்று.


தேவாலயங்களில் ஒவ்வொரு திருப்பலியின் போதும் நம் சொந்தங்களுக்காகவும் , நம் தேவைகளுக்காகவும் வேண்டும் போது அவரை நினைத்து பார்பதுண்டு.

Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]